×

‘நீ தமிழக மகன்.. நான் தமிழ்நாட்டு மகள்’ ஈரோடு இடைத்தேர்தலில் என்னுடன் போட்டியிட அண்ணாமலை தயாரா? நடிகை காயத்ரி ரகுராம் சவால்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப்போவதாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். பாஜவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாகவும், அவர்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும், முக்கிய தலைவர்களின் ஆபாச வீடியோக்கள், ஆடியோக்களை வைத்து பெயரைக் கெடுப்பதாகவும் மாநில தலைமை மீது கருத்தை பதிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் பாஜவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்த காயத்ரி ரகுராம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜவிலிருந்து விலகுவதாக கடந்த ஜன.3ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் காயத்ரி ரகுராம். இதை தொடர்ந்து, பேட்டி அளித்த அண்ணாமலை, ‘கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து போஸ்ட் செய்த காயத்ரி, ‘‘ஆபாச பேச்சாளரின்  ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசும் ஒரு  தலைவருக்கு இசட் வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை  எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை  அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் இசட் பிரிவு பாதுகாப்பு மக்களின்  பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை  பிடிப்பான்’’ என்று குறிப்பிட்டு கட்சியினர் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தினார்.  

 இந்நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராமை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக, பாஜவின் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் ஜன.13ம் தேதி அறிவித்தார். காயத்ரி ரகுராம் பாஜவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், அண்ணாமலைக்கு சவால் விட்டு பதிவு போட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது டிவிட்டரில் காயத்ரி ரகுராம், ‘‘ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீங்க தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்” என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பாஜவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Tamil ,Nadu ,Annamalai ,Erod ,election , 'You are the son of Tamil Nadu.. I am the daughter of Tamil Nadu' Is Annamalai ready to contest with me in the Erode by-election? Actress Gayatri Raghuram Sawal
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து